குறள் 1020

நாணுடைமை

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று

naanakath thillaar iyakkam marappaavai
naanaal uyirmarutti atrru


Shuddhananda Bharati

Sensitiveness to shame

Movements of the shameless in heart
Are string-led puppet show in fact.


GU Pope

Shame

'Tis as with strings a wooden puppet apes life's functions, when
Those void of shame within hold intercourse with men.

The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.


Mu. Varadarajan

மனத்தில்‌ நாணம்‌ இல்லாதவர்‌ உலகத்தில்‌ இயங்குதல்‌ மரத்தால்‌ செய்த பாவையைக்‌ கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற்‌ போன்றது.


Parimelalagar

அகத்து நாண் இல்லார் இயக்கம் - தம் மனத்தின் கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று இயங்குகின்ற இயக்கம்; மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - மரத்தாற் செய்த பாவை இயந்திரக் கயிற்றினானாய தன் இயக்கத்தால் உயிருடைத்தாக மயங்கினாற்போலும்.
விளக்கம்:
(கருவியே கருத்தாவாயிற்று. நாணில்லாத மக்கள் இயக்கம், நாணுடைய பாவை இயக்கம் போல்வதல்லது, உயிரியக்கம் அன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் நாணில்லாரது இழிவு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றி னாலே இயங்கி உயிருள்ளது போல மயக்குமதனை ஒக்கும்,
(என்றவாறு). இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.