குறள் 1

கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

akara muthala yeluththaellaam aathi
pakavan muthatrrae ulaku


Shuddhananda Bharati

The praise of God

'A' leads letters; the Ancient Lord
Leads and lords the entire world.


GU Pope

The Praise of God

A, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains.

As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.


Mu. Varadarajan

எழுத்துக்கள்‌ எல்லாம்‌ அகரத்தை அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றன. அதுபோல்‌ உலகம்‌ கடவுளை அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றது.


Parimelalagar

எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
விளக்கம்:
(இது தலைமைபற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து எல்லாம்' என்றார். 'ஆதிபகவன்' என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள்மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின்மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம்-தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) எழுத்துக்க ளெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன; அவ்வண்ணமே, உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து, (என்றவாறு).